உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு, புனித ரம்ஜான் மாதம் பக்தி, ஒழுக்கத்திற்கான நேரம். ஆனால், உத்தரபிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான கௌரியாவில், ரம்ஜான் ஆழ்ந்த, மதங்களுக்கு இடையேயான நட்புறவையும் வெளிப்படுத்துகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக, குலாப் யாதவின் இந்து குடும்பம், ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு முன் உட்கொள்ளும் விடியற்காலை உணவான 'செஹ்ரி'க்கு கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் சரியான நேரத்தில் எழுந்திருப்பதை உறுதிசெய்து வருகிறது. 45 வயதான யாதவ், அவரது 12 வயது மகன் அபிஷேக்கிற்கு, ரம்ஜான் மாதத்தில் தூக்கம் என்பதை கைவிட்டு விடுவார்கள். ஒவ்வொரு இரவும் அதிகாலை 1 மணிக்கு, தந்தை-மகன் இருவரும் கால்நடையாகப் புறப்பட்டு, தெருநாய்களை விரட்ட ஒரு டார்ச், குச்சியுடன், கிராமத்தின் வழியாக நடந்து செல்கிறார்கள்.
இதையும் படிங்க: மாருதி சுசுகி முதல் ஹூண்டாய் வரை.. கார் விலை தாறுமாறாக உயர்வு.. இனி கார் வாங்குவது கனவா?

ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் நிற்கிறார்கள். குடும்பங்கள் செஹ்ரிக்காக விழித்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்யும் வரை அங்கிருந்து நகர மாட்டார்கள். "அத்தகைய நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள், அதனால் மதம் ஒருபோதும் தடையாக மாறாது. நீங்கள் அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றால், அவர்கள் உங்களை ஒரு மசூதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்ற பழைய கருத்துருவாக்கம் உண்டு. யாதவ் இந்த உணர்வை வெளிப்படுத்துகிறார். 1975 ஆம் ஆண்டு தனது தந்தை சிர்கித் யாதவ் தொடங்கிய ஒரு பாரம்பரியத்தை இப்போதும் முன்னெடுத்துச் செல்கிறார்.
யாதவின் இந்த அர்ப்பணிப்பு முயற்சி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தனது ஆரம்ப ஆண்டுகளை நினைவு கூர்ந்த யாதவ், குழந்தையாக இருந்தபோது தனது தந்தை இரவில் ஏன் வெளியே சென்று, சேஹ்ரிக்கு மக்களை எழுப்பினார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார். ஆனால் அவர் வளர்ந்தவுடன், பாரம்பரியத்தின் பின்னால் உள்ள ஆழமான அர்த்தத்தை அவர் புரிந்துகொண்டார்.

"இப்போது இதைச் செய்வதில் நான் மிகுந்த அமைதியைக் காண்கிறேன்" என்று அவர் கூறுகிறார். தொழில் ரீதியாக ஒரு தினசரி கூலித் தொழிலாளியான யாதவ், ஆண்டின் பெரும்பகுதியை டெல்லியில் வேலை செய்கிறார். ஆனால், ரம்ஜான் நெருங்கும்போது, தனது குடும்பத்தின் ஐம்பதாண்டு கால வழக்கத்தை நிலைநிறுத்த தனது கிராமத்திற்குத் திரும்புகிறார்.
தனது தந்தை, தனக்குச் செய்தது போல், தனது மகனிடமும் பொறுப்புணர்வு உணர்வை ஏற்படுத்த அவர் விரும்புகிறார். ஒவ்வொரு இரவும், அவர் தனது இளம் வயது மகன் அபிஷேக்கை அழைத்துச் சென்று, அவர்களின் குடும்பத்தின் புனித பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கிறார்.
"என் தந்தைக்குப் பிறகு நான் செய்தது போலவே, என் மகன் எனக்குப் பிறகும் இதைத் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று யாதவ் கூறுகிறார். அவர்களின் தந்தை இறந்த பிறகு, யாதவின் மூத்த சகோதரர் சில வருடங்கள் பொறுப்பேற்றனர். ஆனால் அவரது மூத்த சகோதரரின் பார்வை பலவீனம் அடைந்தபோது, அவர் நிறுத்த வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் பொறுப்பேற்றுள்ளேன். ஒவ்வொரு ரம்ஜானுக்கும் இதைச் செய்ய நான் திரும்பி வருவேன்" என்று யாதவ் கூறுகிறார்.

யாதவின் அர்ப்பணிப்பு கவனிக்கப்படாமல் போகவில்லை. அவரது முயற்சிகள் கிராமத்தில் பரவலாகப் பாராட்டப்படுகின்றன. அவரது முஸ்லிம் அண்டை வீட்டார் அவரை ஆழ்ந்த மரியாதையுடன் மதிக்கிறார்கள். "சேஹ்ரிக்கு மக்களை எழுப்புவது ஒரு உன்னதமான செயல். குலாப் பாய் யாரும் பின்தங்கி இருக்காமல் பார்த்துக் கொள்கிறார். அவர் இரண்டு மணி நேரம் கிராமத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார். பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டார்களா? என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கச் செல்கிறார். இதை விட புனிதமானது என்ன இருக்க முடியும்?" என்று யாதவின் அண்டை வீட்டாரான ஷஃபிக் நெகிழ்கிறார்.
கீதையும், குர்-ஆனும் அன்பைப் போதிக்கும்போது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏன் கருத்து வேறுபாடு இருக்க வேண்டும்?" ரம்ஜான் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று என்பதால், புனித மாதத்தில் தனது அண்டை வீட்டாருக்கு நோன்பு நோற்க உதவுவதன் மூலம் யாதவ் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் யாதவ் என்பதை இஸ்லாமிய மக்கள் உணர்கிறார்கள்.

மத தலங்களில் ஒலிபெருக்கிகள் மீதான அரசு கட்டுப்பாடுகள் பாரம்பரியமாக செஹ்ரி அறிவிக்கப்பட்ட விதத்தை மாற்றியுள்ள நேரத்தில், யாதவின் தனிப்பட்ட தொடர்பு, கதவுகளைத் தட்டுவது, பெயர்களைக் கூறி அழைப்பது, யாரும் பின்தங்கியிருக்காமல் பார்த்துக் கொள்வது, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாக செயல்படுகிறது.
தலைமுறை தலைமுறையாக அவரது அர்ப்பணிப்பு ஒரு பாரம்பரியக் கதை மட்டுமல்ல, ஷஃபிக் பொருத்தமாகச் சொன்னது போல் உலகிற்கு ஒரு பாடம்..!
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த செய்தி.. BE 6 மற்றும் XEV 9e டெலிவரி அப்டேட் கொடுத்த மஹிந்திரா