எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள், லேப்டாப்புகள் மீது பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலருக்கும் அலாதி விருப்பம் உண்டு. அதை விலை குறைவாக வாங்கி விட வேண்டும் என்ற தவிப்பும் உண்டு. இதை ஒரு கும்பல் தங்களது மோசடிக்கு பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களை ரூ.7,000 மற்றும் ரூ.8,000-க்கு தருகிறோம். பணம் செலுத்தியவுடன், கொரியர் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும் என விளம்பரம் செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இணையவழி மோசடி கும்பல் பணம் வசூலித்துள்ளது.

முக்கியமாக வேலை தேடும் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் குறைந்த விலையில் ஐபோன் வாங்கும் ஆசையில் அவர்களிடம் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் செல்போன் கிடைக்காததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, நீங்கள் என்னை நெருங்க முடியாது. நான் பாதுகாப்பான வளையத்திற்குள் இருக்கிறேன் என சவாலாக வாட்ஸ்அப் ஆடியோவாக பதிலளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி...சூதானமா நடந்துக்கோங்க பசங்களா! உதயநிதி சொன்ன அறிவுரை...

இதனால் அதிர்ச்சியடைந்த புதுச்சேரியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டது திருச்சி ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சஜித் அகமது என்பதும், அவருடன் இணைந்து செயல்பட்டவர், புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்பது (22) தெரியவந்தது. மேலும் இவர்கள் பயன்படுத்திய மொபைல் எண்களை வைத்து நேஷனல் சைபர் கிரைம் போர்டல் (NCRP) மூலம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இவர்கள் மீது மொத்தம் 43 புகார்கள் பதிவாகியிருப்பதும், அவர்கள் சுமார் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பட்டதாரி இளைஞர்களான அவர்கள் இருவரையும் கைது செய்த சைபர் க்ரைம் போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கைதான இருவரும் பட்டதாரிகள் என்றும், அவர்கள் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இத்தகைய சைபர் மோசடியில் ஈடுபட்டதும், இதில் மாதேஷ் ஆறு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையவராகவும், தேக்குவண்டா விளையாட்டில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார் என்பதும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானர் பி.ஆர்.கவாய்! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி...