மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர், டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சேது மாதவன். வயது 62. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். தற்போது ஓய்வு பெற்று வீட்டில் வசித்து வருகிறார். அவரது மனைவி நிர்மலா ( வயது 60). அவரும் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததாலும், தற்போது ஓய்வு பெற்று அமைதியான முறையில் வசித்து வந்ததாலும் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இவர்கள் மீது மதிப்பு அதிகம் இருந்துள்ளது. இருவரும் சாந்தமானவர்களாகவே அறியப்பட்டுள்ளனர். எனினும் இவர்களுக்கும் இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது சிறிய சிறிய மனஸ்தாபங்கள் ஏற்படும் எனவு அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இரண்டு குடும்பத்தினருக்கு முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று எதிர்வீட்டில் இருக்கும் 24 வயதான பொறியியல் பட்டதாரி வாலிபர் பிரேம், காலை வீட்டு வாசலில் கோலம் போட்ட நிர்மலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நிர்மாலாவும் அவருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், நிர்மலாவை தாக்கி உள்ளான். நிர்மலா பெரும் கூச்சலெடுத்து கத்தி உள்ளார். தன்னை காப்பாற்றும் படி கதறினார். ஆனால் பிரேம் அவரை தப்பி ஓட முடியாதபடி பிடித்துக் கொண்டு கத்தியால் 15-க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளான். இதற்கிடையே நிர்மலாவின் அலறல் சப்தம் கேட்டு தடுக்க ஓடு வந்த அவரது கணவர் சேது மாதவனுக்கும் கத்தி குத்து விழுந்து உள்ளது.
இதையும் படிங்க: குடிகார அண்ணன் செய்த காரியம்..! ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடுரோட்டில் வெறிச்செயல்!

நிர்மலாவும், சேது மாதவனும் அலறிய சப்தம் கேட்டு, அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பலர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தீராமல் பிரேம் தாக்குதலை தொடர்ந்துள்ளான். தடுக்க வந்த மக்கள் மீதும் கல்லை தூக்கி வீசி உள்ளான். அவனது மூர்க்க தனத்தை பார்த்து பதறிய மக்கள், பதிலுக்கு அவன் மீது கல் மற்றும் கட்டையை தூக்கி வீசி, அவனிடம் இருந்து நிர்மலா மற்றும் சேது மாதவனை மீட்க முயற்சித்துள்ளனர். அப்போதும் அவன் அவர்களை விடுவதாக இல்லை. பொறுமை இழந்த மக்கள் கல் மற்றும் கட்டையால் பிரேமை அடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

பின்னர் படுகாயம் அடைந்த சேது மாதவன் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூர் சென்றாலும் இப்படியா? கணவருடன் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு 7 மாதம் ஜெயில்..!