தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற தமிழக காங்கிரஸ் கட்சி, இம்முறை கணிசமாக அதிகரித்து 39 தொகுதிகள் கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை முன்வைக்க காங்கிரஸ் மேலிடம் ஐவர் குழு அமைத்து, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த இருபது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. 2004 முதல் 2021 வரை பெரும்பாலான தேர்தல்களை திமுகவுடன் இணைந்து சந்தித்தது. 2014 லோக்சபா தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்டது. 2021-இல் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. இந்த வெற்றி விகிதமே இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்கும் அடிப்படையாக உள்ளது.
இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய கட்சியாக தொடங்கப்பட்டது. விஜய் ஆட்சியில் பங்கு வழங்குவேன் என்று அறிவித்தது காங்கிரஸ் தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், ஆட்சியில் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்ற அழுத்தம் காங்கிரஸ் தரப்பில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பி அடிக்கவும் தெரியும்!! மாணிக்கம் தாகூர் பேச்சால் சர்ச்சை! ஒன்றிணையும் திமுக நிர்வாகிகள்!
இந்த சூழலில் காங்கிரஸ் மேலிடம் திடீரென ஐவர் குழு அமைத்தது. கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இக்குழுவில் உள்ளனர். நேற்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விரிவாக பேசினர். திமுக தரப்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தரப்பு குறைந்தது 39 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. காங்கிரசுக்கு சாதகமான 125 தொகுதிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து 39 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமைக்கு கொடுத்துள்ளது.
பொன்னேரி, வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர், கே.வி.குப்பம், கலசப்பாக்கம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஓமலூர், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், ஊட்டி, சூலூர், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், அறந்தாங்கி, காரைக்குடி, மேலூர், மதுரை தெற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இந்த பட்டியலில் உள்ளன.
திமுக தரப்பு உடனடி முடிவு எடுக்காமல், தங்கள் தரப்பில் ஒரு குழு அமைத்து ஆலோசிப்போம் என்று பதில் அளித்தது. விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், காங்கிரஸின் 39 தொகுதி கோரிக்கை கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை 2026 தேர்தல் அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. காங்கிரஸ் கோரும் தொகுதிகளின் பட்டியல் கசிந்துள்ளது. திமுக இதை எப்படி கையாளும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியுடன் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்!! கனிமொழி சந்திப்பின் போது காங்., நிர்வாகி மீது புகார்!!