பெங்களூரு புறநகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு உணவகத்தில், ஆட்டிறைச்சி எனக் கூறி வாடிக்கையாளர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவகம் சீல் வைக்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிகேரே கிராஸ் அருகே உள்ள பொம்மனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ‘காயலோரம்’ என்ற உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த உணவகம், அப்பகுதியில் பிரபலமான உணவகங்களில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சில இளைஞர்கள் அந்த உணவகத்திற்கு சென்று மட்டன் உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். உணவு பரிமாறப்பட்ட பின்னர், இறைச்சியின் சுவை மற்றும் தன்மையில் சந்தேகம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உணவக ஊழியர்களிடம் அவர்கள் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சித்தராமையா Out..! முதல்வராகிறார் டி. கே. சிவக்குமார்..!! கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..!

அப்போது வழங்கப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சி அல்ல, மாட்டிறைச்சி என தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவலஹள்ளி போலீசார், உணவகத்தில் முதற்கட்ட சோதனை மேற்கொண்டனர். விசாரணையின் போது, ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உணவகத்தை தற்காலிகமாக சீல் வைத்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கேரளாவைச் சேர்ந்த ஜிஜூ மற்றும் ஷிம்பு என்ற இருவரை கைது செய்துள்ளனர். உணவகத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் அபிலாஷ் என்ற மற்றொரு நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சி மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைத்த பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது மேலும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணையில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது..! உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் உறுதி..!