கோவையைத் தொடர்ந்து தலைநகர் சென்னையிலும் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட பிளஸ் 2 மாணவர் ஒருவர், 30 மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் நண்பர் ஜெயகணேஷுடன் தனுஷ் கழிவறைக்குச் சென்றபோது, பிளஸ் 1 படிக்கும் தினேஷ் என்ற மாணவன் கஞ்சா புகைத்துக் கொண்டு ஜெயகணேஷ் முகத்தில் புகையை ஊதியதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தனுஷ் விலக்கிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!
இதையடுத்து, வழக்கம்போல் நேற்று பள்ளியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு தனுஷ் சென்று கொண்டிருந்தபோது, மாணவன் தானேஷ் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்கு வந்துள்ளார்.
ஜெயகணேஷ் எங்கே என்று கேட்ட அவர்கள், தனுஷை அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கழுத்துப் பகுதியில் கால் வைத்து மிதித்ததால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
30-க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக சிங்கப்பெருமாள் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், சுயநினைவின்றி கிடந்த மாணவன் தனுஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தனுஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவன் தனுஷின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் மற்றும் பெற்றோர் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்யும் வரை தனுஷின் உடலை வாங்கப் போவதில்லை என்று கூறிய அவர்கள், கொலையில் 30 பேருக்கு தொடர்பு உள்ள நிலையில், மூன்று பேரை மட்டுமே கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!