சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை. அரசு பஸ் டிரைவர், தம்பி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை. மருத்துவமனை முன்பு குவிந்த உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. நிலத்தகராறில் ஏற்பட்ட கொலை என உறவினர் குற்றச்சாட்டு. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
சிதம்பரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணால் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பாலகிருஷ்ணன்(44). ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன்(36). அண்ணாமலையும், ராமச்சந்திரனும் சகோதரர்கள். அவரது மகன்களான இவர்கள் இருவரும் பால்வார்த்துண்ணான் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இன்று இரவு இருவரும் வீட்டிற்கு அருகே உள்ள வயலில் மோட்டார் கொட்டகையில் தண்ணீரை விடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி... தாய், மகன் மர்மமான முறையில் கொலை... போலீசாருக்கு எழுந்த முக்கிய சந்தேகம்...!
இதில் படுகாயமடைந்த இருவரையும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற ராமகிருஷ்ணனை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் போலீசாரும், மருத்துவமனை காவலர்களும் அவர்களை உள்ளே விட மறுத்து, அவசர சிகிச்சை பிரிவின் கதவை இருபுறமும் மூடினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் பால்வார்த்துண்ணான் கிராமத்திற்கு சென்று சகோதரர்கள் வெட்டப்பட்ட இடம், மற்றும் அவரது வீடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவும் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பியவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை நடந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கொலைச் சம்பவம் குறித்து உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர் கூறுகையில்,
கிராமத்தில் நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது. இன்று இரவு மோட்டார் போடுவதற்காக அண்ணன் வயலுக்கு சென்றபோது அரிவாளுடன் காத்திருந்த கும்பல் இருவரையும் வெட்டிக் கொலை செய்து இருக்கிறார்கள். நிலத்தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கொலை சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்றார்
நிலத்தகராறில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்... மூதாட்டி கழுத்தறுத்து கொடூர கொலை..! நாமக்கல்லை உலுக்கிய கோரச்சம்பவம்..!!