எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தைத் தாண்டி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கருத்துகளைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அவரை கைது செய்தனர். இந்த கைது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கைது நடவடிக்கை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணானது என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக காவல்துறை தரப்பில் விரிவான பதில் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

உதயநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, "எதிர்க்கட்சித் தலைவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுங்கள்", "அரசியல் பழிவாங்கலை நிறுத்துங்கள்" என்ற முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்திலும் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதி கைது விவகாரம் தற்போது சட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கிய திருப்பமாக மாறியுள்ளது. கைது, அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் நடத்திய போராட்டம் ஆகியவை இந்த விவகாரத்தை தேசிய அளவிலான அரசியல் விவாதமாக மாற்றியுள்ளன.
இதையும் படிங்க: த்ரிஷாகிட்ட உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்!! வெளுத்து வாங்கிய குஷ்பூ!