சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமாக வெளியாகும் பகுதி நேர வேலை, ஆன்லைன் முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கோவையில் கடந்த சில நாட்களில் பதிவான 5 சைபர் மோசடி வழக்குகளில் மட்டும் பொதுமக்கள் ரூ.81.36 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கோவையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பகுதி நேர வேலை, பிட்காயின் முதலீடு, ஆன்லைன் முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என வெவ்வேறு பெயர்களில் நடந்த மோசடிகளில் 4 பேர் ரூ.41.74 லட்சத்தை இழந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களை மர்ம நபர்கள் முதலில் ஆசை வார்த்தைகளால் நம்ப வைப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்து தினமும் வருமானம் பெறலாம், கூகுள் ரிவ்யூ செய்தால் ஊக்கத்தொகை கிடைக்கும், வெளிநாட்டு விமான நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தரப்படும், பிட்காயின் மற்றும் ஆன்லைன் முதலீடுகள் மூலம் குறுகிய காலத்திலேயே அதிக லாபம் பெறலாம் என பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ரூ.499-க்கு ‘வாடகை காதலன்’! எல்லாவற்றுக்கும் தனித்தனி ரேட்! இளம்பெண்களை குறிவைக்கும் புதிய சைபர் ட்ராப்?
இந்த வாக்குறுதிகளை நம்பும் பொதுமக்களிடம், பதிவு கட்டணம், முதலீட்டுத் தொகை, வரி, கமிஷன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் செலுத்த வைக்கின்றனர்.

சில மோசடி கும்பல்கள் ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் அல்லது ஊக்கத்தொகை வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதிக தொகையை முதலீடு செய்ய வைத்து, பணத்தை முழுமையாக பறித்துக்கொள்கின்றனர்.
பணத்தை அனுப்பிய பிறகு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை கிடைக்காததோ, முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற முடியாததோ தெரியவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர். அதன்பிறகே பலர் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதள விளம்பரங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பணம் அனுப்பக்கூடாது என்றும், அதிக சம்பளம், எளிதான வேலை, குறுகிய காலத்தில் அதிக லாபம் போன்ற வாக்குறுதிகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள், OTP உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிரக்கூடாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான ஆன்லைன் விளம்பரம் அல்லது மோசடி குறித்து உடனடியாக தேசிய சைபர் குற்றப்பதிவு தளம் அல்லது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’, ‘அதிக லாபம்’ மற்றும் ‘வெளிநாட்டு வேலை’ விளம்பரங்களையும் நம்புவதற்கு முன் அதன் பின்னணி மற்றும் நிறுவனத்தின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!