தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் 'வெற்றி பயணம்' திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (அக். 5) விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வெற்றி பயணம் திட்டத்தைத் தமிழக வெற்றிக் கழக அரசு விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை எதிர்த்தும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு முழுமையான கட்டண விலக்கு அளிக்கப்படுவதால், கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பெண் பயணிகள் பயணம் செய்வது முற்றிலும் குறைந்துவிட்டது. இதன் காரணமாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நாள்தோறும் மிகக் கடுமையான நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் தொழிலை அடியோடு கைவிட வேண்டிய பேராபத்தான சூழல் உருவாகும் என்று வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும், பொதுப் போக்குவரத்தில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தவரிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது இந்திய அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் சம உரிமை நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான செயலாகும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெண் பயணிகளின் பயணக் கட்டண மானியமாக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடியை அரசே ஏற்று வழங்குவது போல், தனியார் பேருந்துகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனப் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசிடம் பலமுறை விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சட்டமன்றத்திலோ அல்லது நிர்வாக ரீதியாகவோ முறையான எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாணையும் பிறப்பிக்கப்படாமல், வெறும் முதலமைச்சரின் வாய்மொழி அறிவிப்பு மூலமாக மட்டுமே இந்த வெற்றி பயணம் திட்டம் தன்னிச்சையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, உரிய சட்ட வரைமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தினால் இத்திட்டத்தை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்; மேலும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை வெற்றி பயணம் திட்டத்திற்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால், தமிழக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!