தேவகோட்டை: பாலியல் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணை போலீஸ் நிலையங்களுக்கு இடையே அலைகழித்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி, இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஐந்து போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஒரு பெண், ஆட்டோ டிரைவர் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்க கடந்த மே 18-ம் தேதி உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால், அங்கு பணியில் இருந்த போலீசார் புகாரை கண்டுகொள்ளாமல், வழக்கு பதிவு செய்ய மறுத்ததோடு, அவரை ஒரு ஸ்டேஷனிலிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் புகார் அளித்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், கீதாலட்சுமி உள்ளிட்ட இரு இன்ஸ்பெக்டர்கள், இரு பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவர் என மொத்தம் ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை!! முதல் கையெழுத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்!!

போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “புகார் அளித்த நாள் முதல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் பெண்ணை அலைகழித்ததற்கான காரணங்களை விசாரணையில் உறுதி செய்தோம். எனவே உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றனர்.
பெண்களுக்கு எதிரான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படும் நிலையில், இந்த சம்பவம் தமிழக போலீஸ் துறையின் செயல்பாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் புகார்களை விரைவாக கையாளும் விஷயத்தில் போலீசார் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் உறுதியை பிரதிபலிப்பதாகவும், அதேசமயம் கடமையில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. வழக்கு தொடர்பான முழு விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!