குடும்ப தகராறு காரணமாக மனைவியை காரில் அழைத்து சென்றபோது கத்தியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சிஜு (40) மற்றும் கர்நாடக மாநிலம் வீராஜ்பேட்டையை சேர்ந்த மல்லிகா (33) தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மல்லிகா தனது குழந்தைகளுடன் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வசிக்கும் தனது சித்தி பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதற்கிடையில், மனைவியை மீண்டும் சமாதானப்படுத்த முயன்ற சிஜு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பந்தலூருக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் இருவரும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர். அதன் பிறகு நேற்று மாலை காரில் பந்தலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: மனைவி - மகன் கழுத்தை நெறித்துக் கொலை! துணிக்கடை உரிமையாளர் வெறிச்செயல்! மருமகள் தப்பிய அதிசயம்!

மேங்கோரேஞ்ச் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, தம்பதியருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தகராறு முற்றிய நிலையில், காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சிஜு, மல்லிகாவின் இரு கால்களிலும் சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத தாக்குதலில் மல்லிகா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக உதவிக்கரம் நீட்டி, காயமடைந்த மல்லிகாவை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மனைவியை கத்தியால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சிஜுவை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப பிரச்னை காரணமாக நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நீலகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!