நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் காதல் விவகாரத்தின் காரணமாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நவீன காலத்திலும் சாதியை தூக்கி பிடித்து நடக்கும் இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாற்று சாதியினரை காதலிப்பதே தவறு என்ற எண்ணத்தை திணிக்கும் விதமாக, பழி தீர்க்கும் விதமாக நடக்கும் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: கவினின் உடலை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்... நெல்லை மருத்துவமனையில் போலீசார் குவிப்பு
சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார். அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கவின் குமாரை வெட்டி படுகொலை செய்த சுஜித் என்ற இளைஞர் மீது குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பெண்ணின் தந்தை சரவணன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதி கிடைக்கும் வரை கவின் குமாரின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராடி வந்த நிலையில், இறுதியாக நேற்று கவின்குமாரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, கவின்குமார் கொலை வழக்கு கடந்த 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில் கவின்குமார் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உடலை வாங்கிக்கிறோம்! ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோர் சம்மதம்...