கர்நாடக மாநிலம், தும்கூரில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள தும்கூரில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுக்கா கோலால் அருகே சிம்புகனஹல்லி முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று காலை ஒரு கருப்பு நிற பாலித்தீன் பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அங்கு திரண்டு, அந்த பாலிதீன் பையை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒரு கை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுபற்றி கொரட்டகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த கையை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தபோது, அந்த கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு பாலத்தின் பையில் இன்னொரு கையும், அதற்கு இன்னொரு ஒரு கிலோமீட்டர் தொலைவில் சில பாலிதீன் பைகளில் துண்டிக்கப்பட்ட இரண்டு கால்களும், இதயம், வயிறு, குடல் ஆகிய உடல் பாகங்களும் கிடைத்தன.
இதையும் படிங்க: ஸ்கூல் ஹெட்மாஸ்டரை மாற்ற இப்படி ஒரு செயலா..!! உசுரு போனா திரும்ப வருமா..? கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
அவை அனைத்தையும் கைப்பற்றிய போலீசார், தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் தேடியும் தலையை மீட்க முடியவில்லை. பின்னர் உடல் பாகங்களை ஒன்றாக சேகரித்து, போலீசார் ஆய்வு செய்ததில் அது பெண்ணின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மீட்கப்பட்ட உடல் பாகங்களை போலீசார் சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையான பெண் யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பெண்ணின் தலை மற்றும் மற்ற உடல் பகுதியையும் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

காவல்துறை, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கண்டறிய முயற்சித்து வருகிறது. மேலும், இதுபோன்ற கொடூர குற்றங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ED-யிடம் சிக்கிய காங். எம்எல்ஏ கே.ஒய். நஞ்சேகவுடா.. ரூ.1.32 கோடி சொத்துக்கள் பறிமுதல்..!