மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இட்லிக் கடை நடத்தி வந்தவரின் வீட்டில் 9 எம்.எம். பிஸ்டல் துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் உலோகச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி வீட்டுக்கு வந்தது எப்படி, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வாகனச் சோதனையில் சிக்கிய மூவர்
சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை (அக்டோபர் 24) மாலை காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகப் பையுடன் வந்த மூன்று பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இதையும் படிங்க: சென்னை மடிப்பாக்கத்தில் தகராறு! வீட்டுக்கே வந்து கணவன், மனைவியை தாக்கிய போதை ஆசாமிகள்!
அவர்களிடம் நான்கு உலோகச் சிலைகள், பூஜை மணி, கத்தி மற்றும் குளோரோபார்ம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொருட்களைக் கைப்பற்றிய போலீஸார், மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இட்லிக் கடை நடத்தும் தம்பதியர்
விசாரணையில், அவர்கள் சீர்காழி அரியாபிள்ளை குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (47), அவரது மனைவி ரோஸ்லின் (41) மற்றும் விளந்திடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி (25) என்பது தெரியவந்தது.
சுரேஷும் அவரது மனைவியும் அரியாபிள்ளை குளக்கரையில் தள்ளுவண்டியில் இட்லிக் கடை நடத்தி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சீர்காழி வாய்க்காங்கரை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குறி சொல்லும் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் சோதனை; துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
தொடர்ந்து சுரேஷின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 எம்.எம். பிஸ்டல் துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் மற்றும் சாமி உலோகச் சிலைகள் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். வாகனச் சோதனையின்போது கிடைத்த பொருட்களையும் சேர்த்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சீர்காழி போலீஸார், சுரேஷ், ரோஸ்லின், அப்துல் ஹாதி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
துப்பாக்கி கிடைத்தது எப்படி? போலீஸார் தீவிர விசாரணை
இதற்கிடையே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். துப்பாக்கியை அவர்கள் எங்கிருந்து பெற்றனர், அதற்கான உரிமம் உள்ளதா, உலோகச் சிலைகள் எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இட்லிக் கடை நடத்தி வந்தவரின் வீட்டில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவிலேயே பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பின்னணி மற்றும் கைதானவர்களின் தொடர்புகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் ஆபாச செயலி மூலம் வலைவீச்சு? இளைஞர்களை நேரில் வரவழைத்து பணம் பறிப்பு? போலீஸ் எச்சரிக்கை!