ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீ சிட்டியில் உள்ள டில் ஹெல்த்கேர் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்களும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்யவேடு மண்டலத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பூங்காவில் டில் ஹெல்த்கேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தபோது தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்ததுடன், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்தனர்.
வெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், முதலில் சில தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!

உயிரிழந்தவர்களில் தமிழகத்தின் நாயுடுகுப்பத்தைச் சேர்ந்த 20 வயது மோகன், மாதர்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது ரமேஷ் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கௌரப் ராய், திருப்பதி மாவட்டம் செரிவி கிராமத்தைச் சேர்ந்த சின்ன மஸ்தான் ஆகியோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். மேலும் தடா பகுதியைச் சேர்ந்த வாசு என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
காயமடைந்த மற்ற தொழிலாளர்களுக்கு ஸ்ரீ சிட்டி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாய்லர் வெடிப்புக்கான தொழில்நுட்ப காரணம் மற்றும் தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமண ஆசை காட்டி மருத்துவ மாணவிக்கு வலை? தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல்? இளைஞர் கைது!