தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்கவில்லை. இதனிடையே, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை என்றும் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே என்றும் விஜய் தெரிவித்தார். பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா என்றும் ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கூறினார். புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும் என்றும் திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது என கூறிய அவர், வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம் திமுகவின் கபட நாடகம்..! SIR- க்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்…!
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும் என்று கூறிய அவர், கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க.. இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!