உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில், பங்சு மாவட்டம் சடுசங் பகுதியில் ஓர் டோர் கோர் என்ற காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர், நான்கு பாதுகாவலர்கள் மற்றும் ஒரு பெண்ணைக் கொன்ற பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆனது.

இச்சம்பவம், சுமார் பகல் 12:38 மணியளவில் நிகழ்ந்தது. இந்த சந்தை, சுற்றுலாப் பயணிகளால் நன்கு அறியப்பட்ட சாட்டுசாக் வார இறுதி சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர், தாக்குதலின் நோக்கத்தையும், துப்பாக்கி ஏந்தியவரின் அடையாளத்தையும் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கும், தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் நடந்த மோதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சர்ச்சில் கேட்ட துப்பாக்கி சப்தம்! துடிதுடித்து பலியான பெண்கள்!! ஞாயிறு பிரார்த்தனையில் சோகம்!!
https://x.com/i/status/1949746342147870777
சம்பவ இடத்தில் இருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவர் வெள்ளைத் தொப்பி அணிந்து, மார்பில் முதுகுப்பையுடன் வாகன நிறுத்துமிடத்தில் ஓடுவதைப் பதிவு செய்துள்ளன. இதில் சுற்றுலாப் பயணிகள் எவரும் உயிரிழக்கவோ, காயமடையவோ இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் ஆயுத வன்முறை அரிதல்ல; தளர்வான ஆயுதக் கட்டுப்பாடு காரணமாக இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 2023இல் பாங்காக்கில் நடந்த வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், தாய்லாந்தின் முக்கிய பொருளாதாரத் துறையான சுற்றுலாவைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: வர்த்தக ஒப்பந்தம் ஓகே.. சட்டென குறைந்த வரி!! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தாராளம் காட்டிய ட்ரம்ப்..