பெய்ஜிங்: சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 80 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 201 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஷான்சி மாகாணத்தில் இயங்கி வந்த இந்த நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தனர். திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு முழு சுரங்கத்தையும் உலுக்கியது. பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
விபத்து செய்தி அறிந்ததும் மீட்புப் படையினர் உடனடியாக சுரங்கத்துக்கு விரைந்தனர். நீண்ட நேரம் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு 201 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் 80 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

இந்த விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கவலை தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விபத்து சீனாவில் நிலக்கரி சுரங்கப் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பல சுரங்க விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு ஆறுதல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!