காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 23 கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர் என்பதை பாகிஸ்தான் எளிதாக மறந்துவிடுகிறது. எங்களது மூதாதையர்கள் இருநாடு கொள்கையை நிராகரித்து இந்தியாவிலேயே தங்கியவர்கள். அதனால் முகமது அலி ஜின்னாவின் இருதேச கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல், இந்தியாவை எங்களது நாடாக தேர்ந்தெடுத்து இங்கேயே தங்கிவிட்டோம். மதத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் கேள்வி எழுப்புகிறது. இருதேச கொள்கையை பேசும் அதேசமயத்தில், ஆப்கானிஸ்தான் எல்லைகளில் பாகிஸ்தான் குண்டுமழை பொழிகிறது.

ஈரான் எல்லையிலும் பாகிஸ்தான் குண்டு போடுகிறது. ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் இல்லையா? பயங்கரவாதம் பாகிஸ்தானின் ஆழ்மனதில் வேரூன்றி விட்டது. அனைத்து சட்ட விரோத செயல்பாடுகளையும் இஸ்லாம் என்ற போர்வையில் பாகிஸ்தான் மூடி மறைக்கிறது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக இதைத்தான் பாகிஸ்தான் செய்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓவைசியின் பூரிக்க வைக்கும் தேசப்பற்று..! ஒரு அடி கூட எதிரி எடுத்து வைக்கக்கூடாது..!