தமிழ்நாட்டில் ஆளும் கட்சி என்ற முகமூடியையும் அதிகாரத்தையும் கேடயமாகப் பயன்படுத்திச் சமூக விரோதிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டதாகவும், தவெக ஆட்சியில் தொடங்கியுள்ள இந்தச் சட்டவிரோதப் போக்குகளை முதலமைச்சர் விஜய் இரும்புக்கரம் கொண்டு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வி தி லீடர்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் தலைதூக்கி வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஆளும் கட்சியைத் தங்களது குற்றச் செயல்களுக்குப் பாதுகாப்புக் கேடயமாக மாற்றிக்கொள்வது சமூக விரோதிகளுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. முந்தைய திமுக ஆட்சியின் போது ஆளும் கட்சி என்ற அதிகார முகமூடியைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள். தற்போது தவெக ஆட்சியிலும் அதே பாணியில் சமூக விரோதிகள் தங்களது சட்டவிரோதச் செயல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

சமூக விரோதிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் ஆளும் கட்சியிலேயே தஞ்சம் அடைவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த ஆபத்தான போக்கை அரசு சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டின் இளைஞர்களையும் எதிர்காலத் தலைமுறையையும் சீரழிக்கும் இந்தப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சமூக விரோதிகளின் ஆதிக்கத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் தயவுதாட்சண்யமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திச் சமூக விரோத சக்திகள் செயல்படுவது குறித்து அண்ணாமலை முன்வைத்துள்ள இந்த எச்சரிக்கையும் குற்றச்சாட்டும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இப்படியா பேசுவது.? வரம்பு மீறிய பேச்சு... திமுக கவுன்சிலருக்கு திருமா. கண்டனம்.!!