உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சேல்ஸ் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பணிநீக்கம் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் என்று ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள், நிறுவனத்தின் வேறு பிரிவுகளில் உள்ள புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

குறிப்பாக, பெரிய வணிக வாடிக்கையாளர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு துறைகளை கவனிக்கும் அக்கவுண்ட் மேனேஜர்கள், ஆப்பிள் பிரீஃபிங் சென்டர்களில் பணியாற்றுவோர் ஆகியோர் இந்த ஆட்குறைப்பில் பாதிக்கப்பட உள்ளனர். ஆனால், சேல்ஸ் பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் புதிய ஆட்களைத் தொடர்ந்து நியமனம் செய்யும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடடே! ஹெல்மெட் போட்டா ஒரு கிலோ ஆப்பிள்... நூதன முறையில் டிராபிக் போலீஸ் விழிப்புணர்வு...!
தற்போது உலகம் முழுவதும் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவு குறைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை அதிகரிப்பது, நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்வது போன்ற காரணங்களால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. டிசிஎஸ், காக்னிசண்ட், மெட்டா, மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், வெரிசோன், ஐபிஎம் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் கடந்த சில மாதங்களாக பல்வேறு நிறுவனங்கள் மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் செலவு ஆகியவற்றைக் காரணம் காட்டி ஆட்களைக் குறைத்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்காவைச் சேர்ந்தது என்பதால், இந்தப் போக்கில் இருந்து தப்ப முடியவில்லை என்று தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை பெரிய அளவிலான ஆட்குறைப்பை அறிவித்ததில்லை. அதனால் இந்தச் செய்தி தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதால், பல பணிகளை இயந்திரங்களே செய்து முடிக்க முடியும் என்பதால், மனித வளத் தேவை குறைவதாகவும் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு அலை தொடர்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அயோத்தியில் பறக்கிறது ராம ராஜ்ஜியத்தின் கொடி!! அசோக் சின்ஹாலின் ஆத்மா சாந்தியடையும்!! யோகி உருக்கம்!