வங்கதேச தலைநகர் டாக்காவில், உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வங்கதேச விமானப்படையின் F-7 BGI பயிற்சி போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி, தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் மீது விமானம் விழுந்து நொறுங்கியதால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விபத்தில் சிக்கி பள்ளி வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் 70% முதல் 80% தீக்காயங்களுடன் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு..!
இந்த விபத்து, நேற்று மதியம் 1:06 மணிக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், 1:30 மணி அளவில் நடந்தது. இந்த F-7 BGI விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு, உத்தராவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரியின் கேன்டீன் கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனே தீப்பிடித்து, அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த பயங்கர காட்சியை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.
விமானப்படையின் இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அமைப்பு, இந்த விமானம் தங்களுடையது என்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக தெரியவில்லை. மைல்ஸ்டோன் கல்லூரி அதிகாரி ஒருவர், “விமானம் பள்ளி வாசல் அருகே விழுந்தது என்றும் வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது என்று கூறியிருக்கிறார்.
விபத்து நடந்த உடனே, உத்தரா, டோங்கி, பல்லாபி, குர்மிடோலா, மிர்பூர், புர்பாச்சல் ஆகிய இடங்களில் இருந்து எட்டு தீயணைப்பு படை வாகனங்கள் மீட்பு பணிக்காக வந்தன. மேலும் வங்கதேச இராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் (BGB) மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். உத்தரா ஆதுனிக் மருத்துவமனை, டாக்கா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை, குவைத்-வங்கதேச நட்பு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம், உத்தரா பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “விமானம் விழுந்து தீப்பிடித்ததை பார்த்து, அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள் என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியிருக்கிறார். முழு விசாரணைக்கு பிறகே இந்த சோக சம்பவத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பது தெரிய வரும்.
இதனிடையே வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் இந்த “இதயத்தை உலுக்கும் விபத்து” குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் இன்று தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, வங்கதேசத்துக்கு ஆதரவு அளிக்கத் தயார் எனத் தெரிவித்தார். இந்த விபத்து டாக்காவில் சமீப காலத்தில் நிகழ்ந்த மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்!! அலறி அடித்து ஓடிய மாணவர்கள்.. நொடியில் போன உயிர்!