டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்து நியூ டெல்லி பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளன. வர்த்தகத்தை சிதைக்கும் ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளுக்கு எதிராக இந்த கூட்டுப் பிரகடனம் வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.பிரிக்ஸ் அமைப்பு இருபது ஆண்டுகளை நிறைவு செய்து புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் இந்தியா தலைமை பொறுப்பை ஏற்று டெல்லியில் இந்த மாநாட்டை நடத்தியது.
பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றும்போது பிரிக்ஸ் யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல என்றும் அனைவருடனும் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்தார். உலகளாவிய ஆளுகையில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் தாமதமின்றி மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குளோபல் சவுத் நாடுகள் விதிகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.மாநாட்டின் போது பல்வேறு உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.

முந்தைய கூட்டங்களில் ஒருமித்த கருத்து உருவாகாமல் இருந்த நிலையில் இந்தியாவின் முயற்சியால் இரவு முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். பிரதமர் மோடி அமர்வின் இறுதியில் “எந்த உறுப்பு நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே நியூ டெல்லி பிரகடனம் 2026 ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று அறிவித்தார். இந்தப் பிரகடனம் விவாதங்களின் சாராம்சத்தை பிரதிபலிப்பதாகவும் கூட்டமைப்பின் பொதுவான இலக்குகளுக்கு தெளிவான திசையை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பிரகடனத்தில் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் முக்கிய இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!
பிரதமர் மோடியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த பிரகடனம் வடிவமைக்கப்பட்டது. அவர் வலியுறுத்திய சீர்திருத்தங்கள், குளோபல் சவுத் பங்கேற்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. உறுப்பு நாடுகளிடையே உள்ள வேறுபாடுகளை களைந்து ஒருமித்த கருத்தை உருவாக்கியது இந்தியாவின் இராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது. பிரிக்ஸ் இப்போது முதிர்ச்சி மற்றும் பொறுப்புணர்வின் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.இந்த பிரகடனம் வெறும் ஆவணம் மட்டும் அல்ல. உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு எதிரான கூட்டுப் பதிலாக அமைந்துள்ளது. ஒருதலைப்பட்ச வரி விதிப்புகள் போன்ற நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தை பாதிக்கும்போது பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மாநாட்டின் போது உறுப்பினர்களிடையே கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!