தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வெடி வெடித்து இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் அனுமதியின்றி பேரணியாக சென்றதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட 500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று கரூர் அருகே சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் கரூர் தொகுதி வேட்பாளர், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் வேட்பாளர் திவ்யா, அரவக்குறிச்சி வேட்பாளர் செல்வகுமார், குளித்தலை வேட்பாளர் கருணாகரன் ஆகியோருக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்தனர்.
வேட்பாளர்கள் நான்கு பேரும் திறந்த வெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: மிஸ் ஆக கூடாது..!! ஆர்.பி உதயகுமார் காரில் அதிரடி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் மும்முரம்..!!
இந்நிலையில் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் 50 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 நான்கு சக்கர வாகனங்களில் 500 நபர்களும், லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் 100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 நான்கு சக்கர வாகனங்களில் சுமார் 500 நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில்,
அனுமதி இன்றி சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், அனுமதியின்றி வெடி வெடித்தல், கட்சி கொடியை பயன்படுத்துதல், அதிகாரிகள் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பறக்கும் படை அதிகாரிகள் புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவு எண்களை ஆராய்ந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!