சர்க்கரையின் விலை உயர்ந்து வருவதைப் பார்த்தால், இனிப்பைவிட கொஞ்சம் கசப்புதான் இப்போது மேலோங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? என விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் பார்த்தோமானால், சர்க்கரையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.60 வரை உயர்ந்திருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தவரை, கரும்பு அதிகமாக விளையும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவை உள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது.
இதையும் படிங்க: “போராட்டம் வெடிக்கும்” ... தவெக அரசை எச்சரித்த வீரபாண்டியன்... அதே மேடையில் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆனந்த்...!
இதில் குறிப்பாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர் சந்தையை எடுத்துக்கொண்டால், ஒரு குவிண்டாலுக்கு சர்க்கரையின் விலை ரூ.4,000-லிருந்து ரூ.5,560 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் என்ன?
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, எத்தனால் கலப்புத் திட்டம் தொடங்கிய பிறகுதான் இந்தப் பிரச்சினை அதிகரித்ததாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
2024-25ஆம் ஆண்டு வரை பெட்ரோலில் எத்தனால் கலப்பு 19 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது ஹார்முஸ் பகுதியில் நிலவும் பிரச்சினை மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக, அரசு எத்தனால் கலந்த E20 பெட்ரோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
E20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்புச் சாறு மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சர்க்கரைக்கான கரும்பின் வரத்து குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 லட்சம் டன் சர்க்கரை, E20 பெட்ரோல் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், சர்க்கரையின் பயன்பாடு அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கிய காரணம் பண்டிகைக் காலம். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் சர்க்கரைக்கான தேவை அதிகரித்துள்ளது.
சர்க்கரையின் தேவை 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சதவீத அளவில் இது குறைவாகத் தோன்றினாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சர்க்கரைக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சர்க்கரை கையிருப்பு எவ்வளவு?
2025ஆம் ஆண்டில் 2.79 கோடி டன் என்ற அளவில் சர்க்கரை கையிருப்பு இருந்தது. தற்போது 3.26 கோடி டன் சர்க்கரை கையிருப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கையிருப்பு இருந்தும் விலை ஏன் உயர்கிறது என்ற கேள்வி எழுகிறது.
2025ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போதும் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இருந்த கையிருப்புடன், 2026ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையும் சேர்த்துதான் தற்போது 3.26 கோடி டன் கையிருப்பு உள்ளது.
இந்த அளவிலான கையிருப்பும் பண்டிகைக் கால தேவை காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குக்கூட போதாது என்று கூறப்படுகிறது.
இதனால் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளதுடன், எதிர்காலத்தில் சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முக்கியமாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக இந்தியா சர்க்கரையை ஏற்றுமதி செய்து வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கரும்பில் பெருமளவு எத்தனால் தயாரிப்புக்காகச் செல்வதால், சர்க்கரை உற்பத்திக்கான கரும்பின் அளவு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் சூழலுக்கு வந்துவிடுமோ என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு பொருளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி விதிக்கப்படும். ஆனால், சர்க்கரை இறக்குமதிக்கு அந்த வகையில் வரிவிலக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. வரிவிலக்கு வழங்கப்படாவிட்டால் சர்க்கரையின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.
அதேபோல், ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிந்தால் சிலர் அதை அதிக அளவில் பதுக்கி வைப்பார்கள். இதுபோன்ற பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
ஆலைகளில் எவ்வளவு சர்க்கரை இருப்பு உள்ளது, கூடுதலாக சர்க்கரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்தாலும், சர்க்கரையின் விலை குவிண்டாலுக்கு பெரிய அளவில் குறையாது என்றும், சுமார் ரூ.100 மட்டுமே குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகமொத்தத்தில், தினமும் காலையில் நாம் குடிக்கும் காபி முதல் சாப்பிட்டு முடித்ததும் எடுத்துக்கொள்ளும் இனிப்பு வகைகள் வரை அனைத்திலுமே சர்க்கரையின் பயன்பாடு உள்ளது.
எனவே, சர்க்கரை விலை உயர்வை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!