சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவைக்கு முதல் நாளிலேயே பயணிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களுக்கான சேவை தொடங்கிய முதல் 5 மணி நேரத்திலேயே 25,000-க்கும் மேற்பட்டோர் இந்த வழித்தடத்தில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய வழித்தடம், பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யும் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதையடுத்து, அன்று மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயணம் செய்வதற்கான சேவை தொடங்கப்பட்டது.
புதிய ரயில் சேவையைப் பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், இரவு 9 மணி வரையிலான 5 மணி நேரத்தில் மட்டும் 25,000-க்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த முதல் நாளிலேயே இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

15 கி.மீ. தூரம்; 11 மெட்ரோ நிலையங்கள்!
பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்துக்கும் வடபழனி மெட்ரோ நிலையத்துக்கும் இடையே சுமார் 15 கி.மீ. நீளத்தில் இந்த உயர்மட்ட வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வடபழனி நோக்கிப் பயணிப்போருக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது.
மெட்ரோ ரயில் நேரம் என்ன?
புதிய வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் சேவை இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய சேவையால் பயண நேரம் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!