ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation- SCO ) என்பது சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், பெலராஸ் உள்ளிட்ட பத்து உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு கடந்த மாதம் 25 மற்றும் 26ம் தேதி சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் (Qingdao) நகரில் நடைபெற்றது.

இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்தியது. இதில் இந்தியா சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது எல்லை பிரச்சினையை தீர்க்கவும், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் 4 அம்ச திட்டங்களை ராஜ்நாத் சிங் பரிந்துரைத்தார்.
இதையும் படிங்க: மக்களை மிரட்டும் பேய் மழை... பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு; வெள்ளப்பெருக்கு... தப்பிக்குமா சீனா?
மேலும் மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், உலகளாவிய ஒத்துழைப்பு இன்றி தனியாக நிர்வகிக்க முடியாது. நமது பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மை என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம். இந்த சவால்களை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கை தேவை. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும் என்று பேசினார்.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மாவோ நிங், இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தயாராக உள்ளதாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன்னை கடந்த ஜூன் 26ம் தேதி அன்று கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் சந்தித்து, எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினை சிக்கலானது மற்றும் அதனைத் தீர்க்க நேரம் எடுக்கும் என்று சீனா கூறியுள்ளது. இருப்பினும், இரு தரப்பும் பல நிலைகளில் பேச்சுவார்த்தைக்கான பொறிமுறைகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளன என்றும், இந்தியாவுடன் இணைந்து எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதற்கும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற விரும்புவதாகவும் மாவோ தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 2024-ல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற 23-வது சிறப்பு பிரதிநிதிகள் (SR) கூட்டத்தில், அக்டோபர் 2024-ல் ஏற்பட்ட பிரிவினை ஒப்பந்தத்தை செயல்படுத்துவது உறுதி செய்யப்பட்டது.

இந்தியா-சீன எல்லைப் பிரச்சனை, 3,488 கி.மீ நீளமுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) உட்பட, பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல், 20 இந்திய மற்றும் 4 சீன வீரர்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது, இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும், அக்டோபர் 2024-ல் ஏற்பட்ட பிரிவினை ஒப்பந்தம் மற்றும் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள், எல்லையில் அமைதியை மீட்டெடுப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் காட்டுகின்றன.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!