திபெத்தில் சீனா கட்டி வரும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் யர்லுங் தசாங்போ நதி பாய்கிறது. அந்த நதி அருணாச்சல பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது. தற்போது அந்த நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டி வருகிறது. திபெத்தின் தென்கிழக்கில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் உள்ள மோடோக் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த அணை தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1325 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான யர்லுங் தசாங்போ நதியின் நீர்வரத்து வரலாற்றை ஆய்வு செய்து அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! இந்தியா உட்பட 4 நாடுகளில் ஆட்குறைப்பு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!

அணை கட்டப்பட்டால் நதியில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதிக மழை காலங்களில் வெள்ள அபாயம் உருவாகலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திபெத் பீடபூமி உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் வேகமாக உருகி பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அணை கட்டப்படும் இடம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதால் அணைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதும் அவர்களின் கருத்தாகும்.
இந்த ஆய்வு முடிவுகள் சீன அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அணை திட்டம் தொடர்பான எதிர்கால நீர் மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய நீர் அபாயங்களை மதிப்பிடும்போது இந்த மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடிபணிந்தது பிரான்ஸ் அரசாங்கம்! வென்றது மாணவர் போராட்டம்! கல்வி முறையில் அதிரடி சீர்திருத்தம் அறிவிப்பு!