அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் பரஸ்பர வரித்திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, சீனா மீது 34 சதவீத வரிவிதிப்பை திணித்தார். இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 34 சதவீத வரிவிதிப்பை செயல்படுத்தியது.

இது அதிபர் ட்ரம்ப்பின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. சீனா 34 சதவீத வரியை திரும்பப் பெற்று பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் 54 சதவீதம் கூடுதல் வரிசைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், சீனஅரசு, தன்னுடைய பொருளாதார நலன்களையும், வர்த்தக நலன்களையும், இறையாண்மையையும் காப்பாற்ற கடைசி எல்லைவரை செல்லவதாக அறிவித்தது.

தையடுத்து, சீனா மீது 104 சதவீத வரிவிதிப்பை இன்று நள்ளிரவு முதல் அமெரிக்கா செயல்படுத்துகிறது. அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது, உலக வர்த்தகமும் ஆடிப்போயுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்பால் சீனாவின் கரன்சியான யுவான் மதிப்பு டாலருக்கு எதிராக கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது. அதாவது டாலருக்கு எதிராக 7.34 யுவானாகச் சரிந்துள்ளது.

இதற்கிடையே அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்தியுள்ளார். இதன்படி, சீனாவில் இருந்து சிறிய பார்சல் அமெரி்க்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டால்கூட, அதற்கு 90 சதவீத வரிவிதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் சீனாவில் இருந்து விலை குறைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குகூட 90 சதவீதம் வரிவிதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அமெரிக்க வர்த்தகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர், வரியுத்தம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 60 டாலராகக் குறைந்துள்ளது.
சீனா பதிலடி: சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 104 சதவீத வரிவிதித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 84 சதவீதம் வரிவிதிக்கப்படும் எனசீனா அறிவித்துள்ளது.

சீனாவின் நிதிஅமைச்கம் வெளியிட்ட அறிவிப்பில் “ அமெரிக்காவில் இருந்து இறக்கமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே 34 சதவீதம் வரிவிதித்திருந்தோம். அதை 84 சதவீதமாக உயர்த்துகிறோம். இந்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்குவரும்” எனத் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது