மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகா செல்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று நடைபெற இருந்த சுகாதாரத் துறையின் ஆய்வுக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு எதிரான தமிழ்நாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று அங்குள்ள முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா, அல்லது வேறு அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மேகதாது 2026-ல்தான் வந்ததா..? வயிற்றெரிச்சல்தான்..! திமுகவை வெளுத்து வாங்கிய த.வெ.க.!
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் காரணமாக, இன்று நடைபெற இருந்த சுகாதாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேகதாது விவகாரம் ஏன் மீண்டும் தீவிரமடைந்தது?
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு அண்மையில் ஒன்றிய அரசிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கர்நாடக அமைச்சர்கள், டெல்லியில் உள்ள மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் சட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீரின் இயற்கை ஓட்டம் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களின் பாசனமும் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
கர்நாடக பயணம் குறித்து எதிர்பார்ப்பு:
இந்தச் சூழலில், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
எனவே, இன்று நடைபெறவுள்ள உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே, முதலமைச்சர் கர்நாடகா செல்வாரா, அல்லது மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை தீர்மானிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு.. 4 சர்வதேச நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தம்!