அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால் மதுரோ சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவில் நிர்வாகச் சீர்குலைவைத் தவிர்க்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அரசுப் பணிகளைத் தொய்வின்றித் தொடரவும் டெல்சி ரோட்ரிக் உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மதுரோவின் தீவிர விசுவாசியாக அறியப்படும் டெல்சி ரோட்ரிக், தற்போது நிலவும் இக்கட்டான அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் நாட்டை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பை ஏற்றுள்ளார். அமெரிக்காவின் பிடியில் மதுரோ இருக்கும் நிலையில், வெனிசுலாவின் இந்த அரசியல் நகர்வு உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில மணி நேரங்களில் அரங்கேறிய அரசியல் மாற்றங்கள் உலகையே உலுக்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் காரகாஸில் உள்ள அவர்களது இல்லத்திலேயே வைத்துச் சிறைபிடிக்கப்பட்டனர். இந்தத் திடீர் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், வெனிசுலா உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஒரு அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நாட்டின் துணை அதிபராகவும், எரிசக்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த டெல்சி ரோட்ரிக், இனி இடைக்கால அதிபராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
56 வயதான டெல்சி ரோட்ரிக், வெனிசுலாவின் ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிக்கத் தலைவர்களில் ஒருவராவார். மதுரோவின் நம்பிக்கைக்குரிய ‘புலி’ என வர்ணிக்கப்படும் இவர், ஏற்கனவே வெளியுறவுத் துறை அமைச்சராகவும், தேசிய அரசியல் நிர்ணய சபையின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மதுரோவின் ‘நிழலாக’ இருந்து வந்த அவர், தற்போது அமெரிக்காவின் சவால்களை எதிர்கொண்டு நாட்டை நிர்வகிக்கும் அதிபர் இருக்கையில் அமர்ந்துள்ளார். தனது முதல் உரையில், “மதுரோவே வெனிசுலாவின் ஒரே உண்மையான அதிபர்; அமெரிக்கா அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அமெரிக்காவின் அத்துமீறல்... உலக நாடுகள் கொந்தளிப்பு!” - வெனிசுலா தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா கடும் கண்டனம்!
வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாக டெல்சி ரோட்ரிக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், “டெல்சி ரோட்ரிக் பொறுப்பேற்றிருப்பது நல்ல விஷயம்; வெனிசுலாவை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற அவர் ஒத்துழைப்பார் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வெனிசுலாவின் உச்சநீதிமன்றம் மதுரோ நிரந்தரமாகப் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாக அறிவிக்கவில்லை. இதனால், 30 நாட்களுக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்படுமா அல்லது டெல்சி ரோட்ரிக் தலைமையிலான இடைக்கால அரசு நீண்ட காலம் தொடருமா என்பதில் இன்னும் இழுபறி நிலவுகிறது. சர்வதேசச் சட்டம் மற்றும் இறையாண்மை குறித்து உலக நாடுகள் கேள்வி எழுப்பி வரும் வேளையில், டெல்சியின் இந்த நியமனம் வெனிசுலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “அமெரிக்காவின் அத்துமீறல்... உலக நாடுகள் கொந்தளிப்பு!” - வெனிசுலா தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா கடும் கண்டனம்!