அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும், இது சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறும் செயல் என்றும் சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகள் சாடியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் இந்தச் சம்பவத்திற்குத் தனது ‘ஆழ்ந்த கவலை’யைத் தெரிவித்துள்ளதோடு, இது ஒரு ‘ஆபத்தான முன்னுதாரணம்’ என எச்சரித்துள்ளது. இதற்கிடையில், மதுரோ சிறைபிடிக்கப்பட்டு நியூயார்க்கிற்குத் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அந்நகரத்தின் புதிய மேயர் ஜோஹ்ரான் மம்தாணி (Zohran Mamdani), அதிபர் டிரம்ப்பை நேரடியாகத் தொடர்புகொண்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

வெனிசுலா தலைநகர் காரகாஸில் அமெரிக்கப் படைகள் நடத்திய மின்னல் வேகத் தாக்குதலுக்கு உலக அரங்கில் பெரும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்துச் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபரைக் கட்டாயப்படுத்திச் சிறைபிடிப்பது அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் போக்கைக் காட்டுகிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகமும், “இது சர்வதேசச் சட்டங்களின் மரணம்; அமெரிக்கா ஒரு உலக ரவுடியைப் போலச் செயல்படுகிறது என தெரிவித்துள்ளது. பிரேசில் அதிபர் லூலா டி சில்வா, “அமெரிக்கா ஒரு ஏற்க முடியாத எல்லையைத் தாண்டிவிட்டது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்கா: மலையில் மோதிய ஹெலிகாப்டர்..!! பரிதாபமாக பறிபோன 4 உயிர்..!!
இந்த விவகாரத்தில் ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா சாசனத்தை மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மதுரோ சிறைபிடிக்கப்பட்டுச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்பாகவே, அவரைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அமெரிக்காவின் செயலை ஐநா சபை ‘சட்டவிரோதமானது’ எனக் கருதுகிறது. குறிப்பாகக் கியூபா அதிபர் மிகுவல் தியாஸ்-கானல், இத்தாக்குதலை “வெனிசுலா மக்கள் மீதான அரசு பயங்கரவாதம்” எனச் சாடியுள்ளார்.
நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்ற இரண்டே நாட்களில், ஜோஹ்ரான் மம்தாணி அதிபர் டிரம்ப்பிற்கு நேரடியாக போன் செய்து தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “ஒரு இறையாண்மை கொண்ட நாடு மீது தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவது ஒரு போர்ப் பிரகடனத்திற்குச் சமம்; இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்” என மம்தாணி பகிரங்கமாக அறிவித்துள்ளார். மதுரோ நியூயார்க்கில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில், மேயரின் இந்த எதிர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு ‘தலைவலி’யை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப்பின் இந்த ‘ஆக்ரோஷமான’ அரசியல் நகர்வுகளால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படும் எனச் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா: கடலில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்..!! பரிதாபமாக பறிபோன 5 உயிர்..!!