டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், முதலமைச்சர் ரேகா குப்தா விரிவான குளிர்கால நடவடிக்கைத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும். அதன் முக்கிய அம்சமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் தொடங்கும்போது காற்றுத் தரம் கடுமையாக மோசமடைவது வழக்கம். வெப்பநிலை குறைதல், காற்றின் வேகம் குறைதல், வாகனப் புகை, கட்டுமானத் தூசி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாயக் கழிவு எரித்தல் போன்ற காரணிகள் இணைந்து நகரத்தின் வளிமண்டலத்தை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. கடந்த ஆண்டுகளின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை மாசுபாடு உச்சத்தை அடைவதற்கு முன்பே விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரேகா குப்தா, கடந்த ஆண்டு மக்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியதை நினைவுகூர்ந்து, இந்த முறை முன்கூட்டியே செயல்பட முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.நவம்பர் 1 முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களில் பாதி பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 50 சதவீதத்தினர் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். இதனால் அலுவலகத்திற்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, போக்குவரத்து நெரிசலும் வாகனப் புகையும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, மின்சாரம், நீர் வழங்கல் போன்ற துறைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இதையும் படிங்க: ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மேலும், அலுவலக நேரங்களை மாற்றி அமைத்து, நெரிசலைக் குறைக்கும் வகையில் staggered timings அறிமுகப்படுத்தப்படும்.வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-6 தரத்திற்குக் குறைவான வாகனங்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை நகருக்குள் அனுமதிக்கப்படாது. செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்கப்படாது என்ற ‘நோ PUC, நோ ஃப்யூல்’ கொள்கையும் அமலுக்கு வருகிறது. இதனால் மாசு உமிழும் பழைய வாகனங்கள் சாலையில் இயங்குவது தடுக்கப்படும்.
இதையும் படிங்க: டெல்லியில் தேசியக் கொடி பேரணி முயற்சி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது!