ஏற்கெனவே சீனா மீது 10 சதவீதமும் அதைத் தொடர்ந்து 34 சதவீதமும் வரிவிதித்தது. இதற்கு சீனா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குள் வரும் பொருட்களுக்கு பரஸ்பர வரியாக 34 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அறிவித்தது. இது அதிபர் ட்ரம்ப்பின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. சீனா 34 சதவீத வரியை திரும்பப் பெற்று பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் 54 சதவீதம் கூடுதல் வரிசைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், சீனஅரசு, தன்னுடைய பொருளாதார நலன்களையும், வர்த்தக நலன்களையும், இறையாண்மையையும் காப்பாற்ற கடைசி எல்லைவரை செல்லவதாக அறிவித்தது. இதையடுத்து, சீனா மீது54 சதவீத வரிவிதித்து, மொத்தம் 104 சதவீத வரியை விதிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்க மக்கள் 104 சதவீத வரி அதாவது விலையைடி 104 சதவீதம் வரி செலுத்த வேண்டும் .

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் நேற்று விடுத்த அறிக்கையில் “ சீனா தன்னுடைய 34 சதவீத பரஸ்பர வரிவிதிப்பை திரும்பப் பெறவில்லை.இதனால் சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு புதன்கிழமை அதாவது 9ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும். 9-ம் தேதி முதல் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 104 சதவீத வரி வசூலிக்கும்” எனத் தெரிவித்தார். சீனாவிடம் இருந்து ஏதேனும் பதில் வரும் என அமெரிக்க அதிகாரிகள் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: வேலை பிடிக்கலைனா விடமாட்டியா? வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து.. கொடுங்கையூரில் பரபரப்பு..!

ஆனால், சீனா சிறிதுகூட அசைந்து கொடுக்கவில்லை, அமெரிக்க விதித்த அதே 34 சதவீதத்தை நாங்களும் விதிப்போம் என்பதில் பிடிவாதமாக இருந்தது. அமெரிக்க அழைத்தபடி, வரிவிதிப்பை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கும் சீனா வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 104 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த விரிவிதிப்பு சர்வதேச வர்த்தகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2ம் தேதி உலக வர்த்தகம் சரிந்து மீண்டு வந்தநிலையில் இந்த அறிவிப்பால் மீண்டும் உலக நாடுகளின் வர்த்தகம் பாதாளம்நோக்கி சரியும்.அமெரிக்கா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகரக்கூடிய ஆபத்து இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீ்ட்டாளர்கள் அச்சத்தால் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள் இதனால், லட்சம் கோடிக்கணக்கிலான டாலர்கள் இழப்பை சந்தித்தது அமெரிக்க பங்குச்சந்தை.

இந்தியாவிடம் ஆதரவு: அமெரிக்காவின் நியாயமற்ற வரிவிதிப்புக்கு எதிராக இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தில் செய்தித்தொடர்பாளர் யூ ஜிஹ் விடுத்த அறிவிப்பில் “ சீனாவில் நிலையான பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம், உற்பத்தி திறன் ஆகியவை உலகளவில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவும், சீனாவும் உலகின் மிகப்பெரிய வளர்ந்துவரும் நாடுகள். இந்த நேரத்தில் அமெரி்க்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு எதிராக சேர்ந்துநிற்க வேண்டும். இருவரின் வர்த்தக நடவடிக்கையை பரஸ்பரம் பலன்அளிப்பதாக மாற்ற வேண்டும்.

அமெரிக்கா வரிவிதிப்பு முறையை தவறாகப் பயன்படுத்துவதால், உலக நாடுகள், குறிப்பாக தெற்காசியநாடுகளின் வளர்ச்சிக்கான உரிமையைப் பறிக்கின்றன. இந்த நேரத்தில் இந்தியா, சீனா ஒன்றிணைந்து அமெரிக்கா அளி்க்கும் சிரமங்களைச் சமாளிக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் வரிப் யுத்தத்தில் யாரும் வெற்றிபெற்றதில்லை. அனைத்து நாடுகளும் சேர்ந்து விரிவான ஆலோசனைக் கொள்கைகளை கொண்டுவந்து, பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்து வகையான ஒருதலைப்பட்சமான மற்றும் பாதுகாப்புவாதத்தையும் கூட்டாக எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் கியா தொழிற்சாலையில் 900 இன்ஜின்கள் திருட்டு.. 5 ஆண்டுகளாக திட்டமிட்டு கொள்ளை..!