கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி மாதம், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாசக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்தார். இதையடுத்து அவரது உடல் நலம் தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில்,தான் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் காலமானதாக வாட்டிகன் தெரிவித்தது.

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களை சோகம் அடைய வைத்தது. போப் பிரான்சிஸ் மறைவையடுத்து இந்திய உள்பட பல்வேறு நாடுகளிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. போப் பிரான்சிஸ் உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்புக்கு முதல் அடி..! 3 ஆண்டுகளில் முதல்முறையாக சரிந்தது அமெரிக்க பொருளாதாரம்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாடிகனுக்கு வந்தனர். போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது. 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 7ம் தேதி புதிய தலைவரை தேர்வு செய்யும் மாநாடு நடக்கிறது.

உலகின் பல நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கர்டினால்கள் ஓட்டுப் போட்டு புதிய தலைவரை தேர்வு செய்வார்கள். கத்தோலிக்க திருச்சபையை அடுத்து யார் வழி நடத்த வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கடந்த ஏப்ரல் 29ல் கேட்கப்பட்டது. அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த டிரம்ப், நான் போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுதான் என் முதல் தேர்வாக இருக்கும் என்று கூறினார். அவருடை பதில் பேசு பொருளானது. இந்நிலையில் டிரம்ப் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, போப் உடையில் தான் இருப்பது போன்ற படத்தை, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இதைப் பலர் நகைச்சுவையாக பார்த்தனர். இன்னும் பலர் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். தேவாலயத்தையும், போப்பையும், போப் தேர்வு செய்யப்படும் முறையையும் அவமதிப்பதாக டிரம்பின் செயல் உள்ளது என்று கூறி வருகின்றனர். சிலர் இதில் நகைச்சுவையைக் கண்டாலும், மற்றவர்கள் இது மிகவும் உணர்ச்சியற்றது என்று விமர்சித்தனர். போப் ஆண்டவர் பிரான்சிஸின் மரணத்தை டிரம்ப் கேலி செய்வதாக குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: 'இந்தியா-பாகிஸ்தானின் 1,500 ஆண்டு காலப் பகை... இப்போதே முடிச்சி விட்டுடுங்க... அவசரப்படுத்தும் டிரம்ப்..!