ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப் படைகளிடையே மூண்டுள்ள போர், தற்போது கடல்சார் வர்த்தக வழித்தடங்களிலும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட ட்ரோன் படகுத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இது தற்போதைய போரில் நிகழ்ந்த முதல் இந்தியப் பலியாகக் கருதப்படுகிறது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் (Marshall Islands-flagged) சுமார் 59,463 மெட்ரிக் டன் எரிபொருளைச் சுமந்து சென்ற 'எம்.கே.டி வியோமி' (MKD VYOM) என்ற எண்ணெய் கப்பலே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானது. மஸ்கட் அருகே உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகத்திற்கு வடமேற்கே சுமார் 52 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா ட்ரோன் படகு ஒன்று, கப்பலின் பிரதான இயந்திர அறை (Engine Room) மீது மோதி வெடித்தது. இந்தத் திடீர் வெடிப்பு மற்றும் தீ விபத்தில், இயந்திர அறையில் பணியில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

கப்பலில் மொத்தம் 21 பணியாளர்கள் இருந்தனர். இதில் 16 பேர் இந்தியர்கள், 4 பேர் வங்கதேசத்தினர் மற்றும் ஒருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். உயிரிழந்த மாலுமியைத் தவிர மற்ற 20 பேரும் ஓமன் கடற்படை மற்றும் அருகிலிருந்த எம்.வி சாண்ட் என்ற சரக்குக் கப்பலின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஈரான் உச்சத் தலைவர் கமேனி படுகொலையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது.
இந்தியத் தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து உயிரிழந்த மாலுமியின் உடலைத் தாயகம் கொண்டு வரவும், மீட்கப்பட்ட மற்ற இந்தியர்களைப் பாதுகாப்பாக அனுப்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலின் உளவுப்படை தாக்குதலில் ஈரானின் உளவுப்பிரிவு தலைவர் கொலை!