திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், மூன்று இடங்களில் ஜெயின் மெட்டல்ஸ் என்ற தனியார் உலோக உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான உலோகப் பொருட்களை தரம் பிரித்து உருக்கி மொத்த விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின், பாத்தப்பாளையம் கிராமம் அருகே அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை ராட்சத பாய்லர் திடீரென வெடித்து சிதறியது.
இந்த பயங்கர விபத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ரவி ரஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பூஷன் குமார், ஓம் குமார், ரஞ்சித் குமார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிம்பர் சிங் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா பாபு, ரண்வீர் குமார் மற்றும் பிரஷர் குமார் ஆகிய மூவர், சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த பூஷன் குமாரை, மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரசாயன கலவையை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மனித உடலின் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும், வெடிவிபத்தால் சிதறிக்கிடக்கும் இடிபாடுகளுக்குள் இன்னும் தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து இடிபாடுகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.