பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கடந்த 6ம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் தாக்கி அழித்தன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக 7ம் தேதியே களத்தில் இறங்கிய பாக். ராணுவம், நம் நாட்டை நோக்கி ட்ரோன்கள், மிசைல்களை வீசியது. பாகிஸ்தானின் பெரும்பாலானா தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டாலும், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப்பில் உள்ள வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், வீடுகளில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, பாக்., விமானப்படை தளங்கள், ராணுவ நிலைகளை குறிவைத்து இந்தியா படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமான ஓடுதளங்கள், வான் பாதுகாப்பு கவசம், ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் ஜெனரல், இந்திய ராணுவ இயக்குனர் ஜெனரலை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொண்டார். அதன் பின், 10ம் தேதி இரு தரப்பிலும் சண்டை நிறுத்தம் செய்வதாக முடிவானது.
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

இந்த நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சேகரித்து வைத்துள்ள கிரானா ஹில்ஸ் பகுதியில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக அப்பகுதியில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூகவலைதலங்களில் பலரும் பதிவிட்டனர். இந்த பதிவு பலரால் பகிரப்பட்டு வேகமாக பரவியது.
செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நம் விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி கிரானா மலைத் தொடரில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அங்கு தாக்குதல் நடத்தவில்லை என்றார். இதற்கிடையே, ஏ.கே.பாரதியின் பதிலையும் வைத்தும், அப்போது அவர் சற்று புன்னகைத்தபடி பேசியதை வைத்தும், பலரும் ட்ரோல் செய்ய துவங்கினர். பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிய துவங்கியுள்ளது. கிரானா மலையில் இந்தியா தாக்குதல் நடத்திவிட்டது என, பலரும் தங்கள் இஷ்டம் போல் வதந்திகளை பரப்ப துவங்கினர்.

நெட்டிசன்கள் பற்ற வைத்த தீ உலகெங்கும் பரவியது. அமெரிக்காவில் கதிர் வீச்சு அபாயம் குறித்து ஆராய அமெரிக்க நிபுணர் குழு பாகிஸ்தானுக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அணு ஆயுதம் உள்ள இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தி, அதன் மூலம் கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டிருந்தால், அணு ஆயுத கொள்கையை மீறியதாக, சர்வதேச நாடுகள் இந்தியாவின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால் நெட்டிசன்களில் பலர் இந்த அடிப்படை கூட புரியாமல், பாகிஸ்தானின் அணுக்கிடங்கை இந்தியா தாக்கிவிட்டது.... பாரத் மாதா கீ ஜெ... அணு ஆயுதத்தை அழித்து பாகிஸ்தானை புரட்டி போட்ட இந்தியா.... என அப்பட்டமான பதிவுகளை பகரிந்தனர். எனவே, பாகிஸ்தானில் கதிர் வீச்சு அபாயம் என பகிரப்பட்ட தகவல்களால் பரபரப்பு தொற்றியது.

எனினும், இந்திய அரசும், முப்படைகளும் இந்த தகவல்களை அறவே மறுத்தன. நாங்கள் தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நாங்கள் வெளியிட்ட பட்டியலில் கிரானா மலைத் தொடர் இடம் பெறவில்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில், IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பானது, பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு ஏதும் ஏற்பவில்லை. அதற்கான முகாந்திரமும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் எந்த பகுதியிலும் அணுக்கதிர் கசிவு கண்டறியப்படவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் சண்டைக்கு பின் பாகிஸ்தானில் கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் பகிரப்பட்ட தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்பது உறுதியாகியுள்ளது. வதந்திகளை நம்பி பல செய்தி நிறுவனங்களும் இது குறித்து ஐயப்பாட்டுடன் செய்தியாக்கின. IAEA விளக்கத்தால், இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கை தாக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸு.. இந்தியாவின் அடியில் கதி கலங்கிய பாக்., நூலிழையில் தப்பிய VVIP விமானம்..!