2020ம் ஆண்டில் இமயமலை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உச்சத்தை அடைந்தது. இதையடுத்து, இந்தியா சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. நூற்றுக்கணக்கான சீன ஆப்களை தடை செய்ததோடு மட்டுமில்லாமல், பயணிகள் விமான பாதைகளை மூடியது.

மேலும் 2020-இல் கொரோனா நோய்தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா விசாக்களையும் இந்தியா நிறுத்தியது. தொடர்ந்து 2022ம் ஆண்டு ஏப்ரலில், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA), சீன குடிமக்களுக்கான அனைத்து சுற்றுலா விசாக்களும் செல்லாது என்று அறிவித்தது.
இதையும் படிங்க: தன்கர் ஏன் திடீர்னு ராஜினாமா பண்ணாரு? மறைக்காம சொல்லுங்க.. மத்திய அரசை கேள்வி கேட்கும் கார்கே!
இந்த ஆண்டு ஜனவரியில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனாவிற்கு பயணம் செய்தபோது, பீஜிங்-புதுடெல்லி இடையே நேரடி வணிக விமானங்களை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், இந்திய யாத்ரீகர்களுக்கு மேற்கு திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி யாத்திரையை மீண்டும் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்கும் பணியை இந்தியா மீண்டும் தொடங்க உள்ளது. சீனாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025 ஜூலை 24ம் தேதி (நாளை) முதல் இந்த முடிவு அமலுக்கு வருகிறது. 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல், நாற்பது ஆண்டுகளில் இந்தியா-சீனா இடையேயான மிக மோசமான எல்லைப் பிரச்சினையாக அமைந்தது. இதன் விளைவாக, இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் சீன குடிமக்களுக்கான விசா வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

கடந்த அக்டோபரில் கசானில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்த மக்களை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா விசா வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லை தாண்டிய நதிகளின் நீரியல் தரவுகளைப் பகிர்வது உள்ளிட்ட ஒத்துழைப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாட்டு மூத்த அதிகாரிகளும் விவாதிக்க உள்ளனர்.
இந்த முடிவு, இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கிடையேயான புரிதலை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கலாச்சார, இயற்கை அழகுகளை அனுபவிக்க இந்த விசா மறுதொடக்கம் வாய்ப்பாக அமையும்.
இதையும் படிங்க: லட்டு, ஜிலேபி, சமோசாவால் ஆபத்தா? சிகரெட் போல வார்னிங் லேபிள் ஒட்டணுமா?