இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இது நாட்டின் சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு சுனாமி போன்று, இந்த பேரிடரும் சுமத்ராவின் வடமேற்கு பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. பேரிடர் மேலாண்மை அமைப்பான BNPBயின் சமீபத்திய அறிக்கையின்படி, வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் ரியாவ் ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த வெள்ளம் பரவியுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. சுமார் 1.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும், 5,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 218 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இந்தோனேசியா: 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!! 20 பேர் உயிரிழப்பு..!!
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த பேரிடரின் காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.
வடக்கு சுமத்ராவின் லாங்காட் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ, "இயற்கை சூழ்நிலைகள் காரணமாக சில இடங்களில் உதவி தாமதமானது. ஆனால் அனைத்து முகாம்களிலும் உணவு, மருத்துவ வசதிகள் போதுமான அளவு உள்ளன" என்று கூறினார்.
அரசு தரப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப 51.82 டிரில்லியன் ரூபியா (சுமார் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து உதவி தாமதம் குறித்த புகார்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும், அரசு சர்வதேச உதவியை நிராகரித்து, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தோனேசியா போன்ற நாடுகள் தயாராக வேண்டும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பேரிடரால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், உற்பத்தி தொழில்கள் அழிந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உதவி வழங்க தயாராக உள்ளன என்றாலும், இந்தோனேசியா அரசு தன்னம்பிக்கையுடன் நிலைமையை கையாள்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை தடுக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அரசு திட்டமிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: சீர்குலைந்த இந்தோனேசியா..!! உயரும் பலி எண்ணிக்கை..!! சிக்கித்தவிக்கும் மக்கள்..!!