இன்று (மார்ச் 16, 2026) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது தாக்குதல்களை அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள அண்டை நாடுகளான சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், யுஏஇ உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. யுஏஇ மீது இதுவரை 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் கிடங்கு (ஃப்யூயல் டேங்க்) ஒன்றை குறிவைத்து ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் எண்ணெய் கிடங்கில் பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது.
தடித்த புகை வானத்தை மூடியது. உடனடியாக துபாய் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துபாய் ஏர்போர்ட்டில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்!! ஈரான் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம்!
Large fire reported in the vicinity of Dubai International Airport after an Iranian drone attack tonight. pic.twitter.com/XmIvEq2KTu
— OSINTtechnical (@Osinttechnical) March 16, 2026
தாக்குதலால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் துபாயிலிருந்து புறப்படும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தன. சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு (DWC) திருப்பி அனுப்பப்பட்டன.
https://x.com/i/status/2033336649891942534
இதனால் இந்தியாவிலிருந்து புறப்பட்ட பல விமானங்கள் பாதிக்கப்பட்டன. திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் பாதியிலேயே திரும்பி வந்து பத்திரமாக தரையிறங்கியது. பயணிகளுக்கு விமான நிலையத்தில் தங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல், சென்னை விமான நிலையத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமும் குஜராத் கடல் பகுதியை அடைந்தபோது துபாய் வான்வெளி மூடப்பட்டதால் U-டர்ன் செய்து சென்னைக்கே திரும்பியது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்த தாக்குதல் மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. சூழல் சீரடையும் வரை பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகத்தை தேடித்தேடி அழிக்கும் ஈரான்!! துபாய் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்! அதிகரிக்கும் பதற்றம்!