மேற்காசியாவில் நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் பதற்றம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு வளைகுடா நாடுகள் ஆதரவு அளித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சீன் ரேசாய் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத சூழலில், ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மொஹ்சீன் ரேசாய், அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகள் துணை நிற்கக்கூடாது என எச்சரித்துள்ளார். அப்படி ஆதரவு அளித்தால், அந்த நாடுகளும் ஈரானின் எதிரிகளாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

மேலும், இதுவரை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற கப்பல்கள் மட்டுமே தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், இனிமேல் பாரசீக வளைகுடாவின் பிற கடல் பகுதிகளில் செல்லும் கப்பல்களும் தாக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், அந்த நாடுகளின் முக்கிய இடங்களும் இலக்காகும் என அவர் கூறியிருப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், தற்போது போரும் இல்லாமல் அமைதியும் இல்லாமல் ஒரு இடைநிலை சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலை நீடிப்பது ஈரானுக்கு சாதகமாக இல்லை என்றும், அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவது இந்த சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஈரானுக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொள்ள உள்ளது. அமெரிக்கா–ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் மற்றும் கத்தார் முயற்சி செய்து வரும் நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனினும், இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே என ஈரான் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படும் என அந்நாட்டு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!