ஈரானின் ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானின் ட்ரோன் தொழிற்சாலைகளில் 82 சதவீதம் செயலிழந்துள்ளன. ஈரானியர்களால் கச்சா எண்ணெய் விற்பனையிலிருந்து எந்த வருமானமும் பார்க்க முடியவில்லை. நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது” என்று கூறினார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று வலியுறுத்திய டிரம்ப், “ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது. அவர்கள் போராட்டம் நடத்தியதற்காக ஆயுதம் ஏந்தாத 42,000 அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். அவர்கள் சொல்லும் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம்” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மேற்காசிய போர் தொடர்ந்தால்!! மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! புடின் எச்சரிக்கை!!

எனினும், ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருப்பதாக டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். “ஈரான் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளது. பேச்சுவார்த்தைகளின் உண்மையான நிலவரம் சிலருக்கு மட்டுமே தெரியும்” என்றும் அவர் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், டிரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளையில், ஈரான் தரப்பில் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!