முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 35-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு ஹார்ட் டிஸ்கும் அதிகாரிகளின் வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் நெருங்கிய உதவியாளராகக் கூறப்படும் கார்த்திக், சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தார். இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அந்த விவகாரம் தொடர்பானதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
இதையும் படிங்க: FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!
ஆனால், அந்த வழக்கிற்காக அல்லாமல், பழைய டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வருவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி, இரண்டாவது குற்றவாளியாக டாஸ்மாக் அதிகாரி விசாகன், மூன்றாவது குற்றவாளியாக முன்னாள் டாஸ்மாக் அதிகாரி ஒருவரும், நான்காவது குற்றவாளியாக உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் ரத்தீஷும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய உதவியாளரான கார்த்திக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மட்டுமல்லாமல், கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபாட்டில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டி.ஆர். பாலுவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சில இடங்களிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த விசாரணையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 284 கடைகள் முறையாக மூடப்படாமல், உரிய அனுமதியின்றி மதுபான விற்பனை நடைபெற்றதாக தற்போதைய அரசு கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மதுபான விநியோக முறையிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்தர மதுபான பாட்டில்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும், சாதாரண மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் நிலையில், மேலும் ரூ.60 ஆயிரம் கோடி வரை கணக்கில் காட்டப்படாமல் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் நான்காவது மாடியில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இந்த முறைகேட்டின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் கரூர் குழுவினரை முழுமையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருபுறம் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உதவியாளரான கார்த்திக்கும், மறுபுறம் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் ரத்தீஷும் இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, இந்த விசாரணை அடுத்த கட்டத்தில் எந்த திசையில் நகரும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!