இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2019 ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. நிலவின் தென்துருவப் பகுதியில் முதன்முறையாக மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்ளும் இலக்குடன் அனுப்பப்பட்ட இந்தப் பணியில், விக்ரம் லேண்டர் கடைசி நிமிடங்களில் தொடர்பு இழந்து செயலிழந்தது. எனினும், அதன் ஆர்பிட்டர் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 100 கி.மீ. உயரத்தில் நிலவைச் சுற்றி வரும் இந்த ஆர்பிட்டர், தொடர்ந்து மதிப்புமிக்க அறிவியல் தரவுகளைப் பூமிக்கு அனுப்பி வருகிறது. இதுவே இஸ்ரோவின் தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு நிரூபிக்கும் சான்றாகத் திகழ்கிறது.
அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (PRL) விஞ்ஞானிகள், சந்திரயான்-2 ஆர்பிட்டரின் Dual Frequency Synthetic Aperture Radar (DFSAR) தரவுகளை விரிவாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி ஒருபோதும் படாத நிரந்தர நிழல் பகுதிகளில் (Permanently Shadowed Regions - PSRs), குறிப்பாக 'டபுளி ஷேடோட்' பள்ளங்களில், மேற்பரப்புக்குக் கீழே அதிக அளவு உறைந்த நீர் பனி (subsurface water ice) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Faustini (ஃபாஸ்டினி) பள்ளத்தின் உள்ளே சுமார் 1.1 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சிறிய பள்ளப் பகுதியில் வலுவான ரேடார் சிக்னல்கள் மூலம் இந்த சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு -200 டிகிரி செல்சியஸ் வரையிலான கடுமையான குளிர் காரணமாக நீர் மூலக்கூறுகள் பனிக்கட்டியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. முன்பு சந்திரயான்-1 மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான முதல் அறிகுறிகளை இந்தியா கண்டறிந்தது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த அடிப்படையை மேலும் வலுப்படுத்துகிறது. நிலவின் இந்த PSRs பகுதிகளில் பல பில்லியன் ஆண்டுகளாக நீர் பனி நிலையாகத் தங்கியிருப்பதாகவும், சுமார் 74% பகுதிகள் தாக்குதல்களால் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உறைந்த நீரை எதிர்கால நிலவுப் பயணங்களில் பயன்படுத்த முடியும்.
மனிதர்களின் குடிநீர் தேவை, சுவாசத்துக்கு ஆக்சிஜன் உற்பத்தி, ராக்கெட் எரிபொருளுக்கான ஹைட்ரஜன் பிரித்தெடுப்பு ஆகியவற்றுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இதனால் நிலவை அடிப்படையாகக் கொண்ட ஆழ் விண்வெளிப் பயணங்கள் (Deep Space Missions) மலிவானதாகவும் நிலையானதாகவும் மாறும். சந்திரயான்-3-இன் வெற்றிகரமான தரையிறக்கத்துக்குப் பிறகு, சந்திரயான்-4 உள்ளிட்ட எதிர்கால பணிகளுக்கு இந்தத் தகவல்கள் பெரும் உதவியாக அமையும்.
இஸ்ரோவின் இந்தச் சாதனை உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. நிலவில் நீர் இருப்பு உறுதியானால், மனிதகுலத்தின் நிலவுக் குடியேற்றக் கனவு நனவாகும். இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிகள் நாட்டை உலக விண்வெளித் துறையின் முன்னணியில் நிலைநாட்டுகின்றன.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... உறுத்தலயா முதல்வரே..! EPS விளாசல்..!