திருவனந்தபுரம்: கேரளாவில் ‘ஊழலற்ற கேரளா’ என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க ஊழல் தடுப்புப் பிரிவு (விஜிலன்ஸ்) தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 201 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஜிலன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இது ஒரு ஆண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்குகளில் பொறி வைத்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் 57 வழக்குகளில் 76 பேர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இதில் அதிகாரிகளுடன் இடைத்தரகர்களும் அதிக அளவில் சிக்கியுள்ளனர்.
துறை வாரியாக பார்த்தால் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது 20 வழக்குகளும், உள்ளாட்சித் துறை மீது 12 வழக்குகளும், போலீஸ் துறை மீது 6 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கல்வித்துறை மற்றும் மின்துறையில் தலா 3 வழக்குகளும், பிற துறைகளில் 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வேலு நாச்சியார் வழியில் மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடிப்போம்… விஜய் உறுதிமொழி…!

பிராந்திய வாரியாக எர்ணாகுளம் மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக 28 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஊழல் நடவடிக்கைகளுக்கு இடைத்தரகர்கள் முக்கிய காரணமாக இருப்பதால் அவர்களை கைது செய்வதில் விஜிலன்ஸ் அதிக கவனம் செலுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய 1,152 ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் ரூ.14.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கேரளாவில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரம், பல துறைகளில் ஊழல் வழக்குகள் பதிவாவது அரசு நிர்வாகத்தின் மீது கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓய்வூதிய திட்டம்... என்னென்ன அம்சங்கள்?.. முழு விவரம்...!