மத்திய அரசில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற சூழல், வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பா.ஜ.க.வில் நடைபெற்று வரும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
2024 ஜூன் 9-ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது செயல்திறன் அடிப்படையில் அமைச்சர்களின் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் சில முக்கிய அமைச்சகங்களில் புதிய நியமனங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்வே, நிதி, கல்வி, தகவல் மற்றும் ஒலிபரப்பு உள்ளிட்ட 10 முதல் 12 முக்கிய அமைச்சகங்களில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 7.7% பொருளாதார வளர்ச்சி!! 140 கோடி இந்தியர்களின் லட்சியம் வலுவாகிறது! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

குறிப்பாக ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஆகியவற்றை கவனித்து வரும் அஸ்வினி வைஷ்ணவின் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நீட் தேர்வு விவகாரம் மற்றும் கல்வித்துறையில் எழுந்த சர்ச்சைகள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவியும் கவனத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவின் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இளம் தலைமுறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால் கூட்டணி சமநிலையையும், தேர்தல் வியூகத்தையும் கருத்தில் கொண்டு அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றம் வெறும் நிர்வாக நடவடிக்கையா அல்லது 2029 லோக்சபா தேர்தலுக்கான பெரிய அரசியல் திட்டத்தின் தொடக்கமா என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க: வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!