சின்சினாட்டி (ஓஹியோ), ஜனவரி 6: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்சின் ஓஹியோ மாகாணம் சின்சினாட்டியில் உள்ள வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்ட சம்பவத்தில், 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஜனவரி 5ஆம் தேதி அதிகாலையில் நடந்தது. துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்போது வீட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது.
சின்சினாட்டியின் ஈஸ்ட் வால்னட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வான்சின் வீட்டுக்கு அருகே சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் நடமாடியதை சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் கவனித்தனர். உடனடியாக உள்ளூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட நபர் வில்லியம் டிஃபூர் (26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஹாமர் கொண்டு வீட்டின் நான்கு ஜன்னல்களை உடைத்ததுடன், சீக்ரெட் சர்வீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து துணை அதிபர் வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எங்கள் வீடு தாக்கப்பட்டது குறித்து அனைவரும் அனுதாபம் தெரிவித்ததற்கு நன்றி. ஒரு பைத்தியக்கார நபர் ஹாமரால் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைய முயன்றதாகத் தெரிகிறது. சீக்ரெட் சர்வீஸ் மற்றும் சின்சினாட்டி போலீசாரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி. நாங்கள் அப்போது வீட்டில் இல்லை; வாஷிங்டன் டி.சி.க்கு திரும்பிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அராஜக திமுக கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்... மேல்முறையீட்டிலும் தோல்வி தான்... நயினார் உறுதி..!

வில்லியம் டிஃபூர் மீது உள்ளூர் குற்றச்சாட்டுகளாக வாண்டலிசம் (சொத்து சேதம்), கிரிமினல் ட்ரெஸ்பாஸ் (அத்துமீறி நுழைதல்), கிரிமினல் டேமேஜிங், ஒப்ஸ்ட்ரக்டிங் ஆஃபிஷியல் பிசினஸ் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, அமெரிக்க அரசு சொத்து சேதம், கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வன்முறை, அதிகாரிகளைத் தடுத்தல் உள்ளிட்ட கூட்டாட்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
டிஃபூர் கடந்த 2024ஆம் ஆண்டு ஒரு வணிக நிறுவனத்தின் ஜன்னல்களை உடைத்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். அப்போது மனநல சிகிச்சைக்கு உத்தரவிடப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்ததாக சில ஆரம்ப செய்திகள் தவறாக பரவின. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை; ஹாமரால் ஜன்னல்கள் உடைக்கப்பட்டது மட்டுமே நடந்துள்ளது. வான்ஸ் குடும்பம் வீட்டில் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அமெரிக்காவில் அரசியல் வன்முறை குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கூவம் முகத்துவாரத்தில் நீர் மேலாண்மை கட்டடம்... துணை முதல்வர் திறந்து வைத்து சிறப்பிப்பு...!