பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. நெதர்லாந்து மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை சந்தித்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான உறவு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள டாப் 5 நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று” என்று தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் தொடர்புகள் ஆழமானவை என்றும், ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, புதுமைகள், பசுமை ஹைட்ரஜன், செமி கண்டக்டர்கள் மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரதமர் மோடி, எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரத் துறைகளில் நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: நெதர்லாந்து சென்றடைந்தார் மோடி!! இந்தியர்களால் நிறைந்தது ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்ட்! உற்சாக வரவேற்பு!
இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளதாகவும், தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம் தனியார் துறைக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். தான் பிரதமராகப் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூர்ந்த அவர், நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக, இந்தியாவின் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஏ.எஸ்.எம்.எல் (ASML) நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குஜராத்தின் தோலேராவில் டாடா நிறுவனத்தின் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஏ.எஸ்.எம்.எல் ஆதரவு அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் செமி கண்டக்டர் துறையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா-நெதர்லாந்து இடையேயான இந்த ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் பெரும் பலனைத் தரும் என்று இருதரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!